நான் மிகவும் இளைஞனாக இருக்கிறேன்.
சாமுவேல் எனும் பக்தன் மிகவும் இளைஞனாக இருந்தபோது கடவுளுக்குப் பணியாற்ற தன்னை ஒப்படைத்தார். கடவுள் அவனோடு பேசினார். ஒரு பெரிய தீர்க்கதரிசியாக மாறினான். தாவீது என்ற இளைஞன் கடவுளின் பார்வையில் கருணை பெற்று அந்நாட்டுக்கு அதிபதியானான். செயற்கரிய செய்வார் பெரியார் எனும் சொற்றொடருக்கு ஏற்ப பெரிய காரியங்களை சாதனைகளைச் செய்யும் இளைஞனும் பெரியவன்தான். சாலமோன் என்னும் இளையராஜாவுக்கு இறைவன் கொடுத்த ஞானத்தால் நாட்டிலுள்ள பெரிய ஞானிகளே பாராட்டும் வண்ணம் நாடாண்டார் (1அர.3:7-11).
வயதானபின் சாதிக்க நினைப்பதைவிட இளம்வயதிலேயே பெரிய சாதனைகளைச் செய்ய முயல்வதில் தவறில்லையே. ஆபத்திலிருக்கும் ஒருவருக்கு பெரியவர் உதவினாலென்ன, இளைஞன் உதவினாலென்ன! கிறிஸ்தவ வாழ்க்கையின் சாராம்சமே பிறருக்கு தூயவழியில் தொண்டு செய்வதுதான். சிறுவர்களை அவர்களுடைய தோற்றத்தை வைத்து எடைபோட முடியாது. எனவே, நீங்கள் இளைஞனென்று கவலைப் படாமல் தைரியமாக களமிறங்குங்கள். கடவுள்கூட இருப்பார். பரமாத்மாவுக்கு முன் இளைஞனென்றோ, முதியவரென்றோ பாகுபாடில்லை.
என் பெற்றோரும் என் பிள்ளைகளும் பக்தியுடையவர்களாக இருந்தால் போதாதா ?