நான் மிகப்பெரிய பாவி. என்னையும் இயேசு மன்னிப்பாரா ?
உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருந்தாலும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும் (எசா.1:18) என்று வேதம் கூறுகிறது.
இயேசு பரிசுத்தமாக வாழ்ந்தார். ஆனால், அவர் பாவிகளிடம் அன்போடு பேசினார். அப்போது யூதமதவாதிகள் இயேசுவின் சீடரைப் பார்த்து, “உங்கள் போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டார்கள். இயேசு இதை கேட்டவுடன், “நோயற்றவருக்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன்”(மத்.9:11-13). “இழந்துபோனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” (லூக்.19:10) என்று இயேசு சொன்னார். நாம் செய்த பாவங்களின் நிமித்தம், தந்தையாம் கடவுளிடமிருந்து தூரம் போய்விட்ட நம்மை, கடவுளோடு ஒப்புரவாக்கத்தான் கடவுளின் மகன் மனித வடிவில் வந்தார். சின்னபாவி, பெரியபாவி என்ற வேறுபாடின்றி எல்லா பாவிகளையும், எவ்வளவு அசிங்கமான, கொடுமையான, கேவலமான பாவம் செய்தவரையும் மீட்கும் வலிமை கிறிஸ்துவுக்கு உண்டு. அவர் உயிர்த்தெழுந்தது தான் பெரியவன் என்ற வறட்டுப் பெருமைக்காக அல்ல. பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகத்திற்கு வந்தார் (1திமொ. 1:15) என்று வேதம் கூறுகிறது. நாம் பாவிகளாயிருக்கும் போது கிறிஸ்து நமக்காக உயிர் நீத்தார் (உரோ. 5:8) என்று பவுல் கூறுகிறார்.
கிறிஸ்துவிடம் வந்த விபச்சாரியை மன்னித்து புதுவாழ்வு வாழ வலிமையையும் கொடுத்தார் (யோவா. 8:3-11). பொருளாசைக்காரனும், ஏமாற்றுக்காரனுமாய் இருந்த சகேயு என்னும் பெரும்பாவியை மன்னித்து தூய்மையான புதுவாழ்வு வாழ இயேசு அருள்பாலித்தார் (லூக். 19:1-10). தன்னை மறுதலித்த (லூக். 22:54-62), பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனுடைய காதை வெட்டிய பேதுருவை (மத். 26:51-53) இயேசு மன்னித்தார். இயேசுவை பழித்துப்பேசி, கிறிஸ்தவர்கள் பலரை கொலைசெய்து, சபையைத் துன்புறுத்திய சவுலை மன்னித்து, ஒரு பக்தியுள்ள புனிதனாக மாற்றவில்லையா? (தி.பணி. 26:9-11). விபச்சாரம், கொலை போன்ற பாவங்களைச் செய்த தாவீதை மன்னித்து “ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்” என்று கடவுள் கூறவில்லையா? (தி.பணி. 13:22). இயேசுவால் மன்னிக்க முடியாத அளவுக்கு பெரும்பாவமென்று ஒன்றுமில்லை. சிலுவையில் தன்னை அறைந்த கொலைகாரக் கும்பலைக்கூட மன்னித்த பாசமுள்ள தெய்வம் உங்களையும் மன்னிக்கமாட்டாரா? (லூக்.23:27). ஒரு காலத்தில் இயேசுவின் ஊழியங்களுக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய அடியவர்களைத் துன்புறுத்திய ஆயிரக்கணக்கான பாவிகள், இன்று இயேசுவின் அன்பை விளக்கும் நற்செய்திக் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தைரியமாக இயேசுவிடம் வாருங்கள் அவர் உங்கள் வாழ்வை மாற்றி புனிதனாக மாற்றுவார். தன்னைத் தாழ்த்தி இறைவனிடம் ஒப்படைத்த எவரையும் இயேசு நிராகரிப்பதில்லை தாழ்மையுள்ளவர்களை இயேசு புறந்தள்ளமாட்டார் (யோவா. 6:37).
நம் பாவங்களை நாம் ஒப்புக்கொண்டால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார் (1யோவா. 1:9). முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள் முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள் (எசா. 43:18)