வானத்துப் பறவைகளை நோக்குங்கள். அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றிற்கும் உணவளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தை ஒரு முழம் கூட்டமுடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். காட்டு மலர்ச்செடிகள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதும் இல்லை நூற்பதுமில்லை. இன்றைக்கு இருந்து நாளை அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்கு கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் அதிகம் செய்யமாட்டாரா? ஆகவே, எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை அணிவோம் என்று கவலைகொள்ளாதீர்கள். அனைத்துக்கும் மேலாக கடவுளுடைய ஆட்சியையும், அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்பொழுது, இவை அனைத்தும் உங்களுக்கு சேர்த்து கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளைய கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத்.6:26-36) என்று இயேசு அறிவுறுத்துகிறார்.
வரதட்சணை கொடுக்க வேண்டுமே என்று நீங்கள் பயப்படாதீர்கள். வரதட்சணை வாங்கப் பேராசைப்படுவர்கள் இந்த உலகில் பலருண்டு. ஆனால், பணஆசை என்பது சிலை வழிபாட்டிற்கு சமமானது என்று வேதம் கூறுகிறது. வரதட்சணை கேட்காமல் உங்கள் மகளைத் திருமணம் செய்ய, ஒரு நல்ல மணமகனை கடவுள் தருவார். வரதட்சணைக் கொடுமையை வெறுக்கும் ஆண்களும் பெண்களும் இம்மண்ணிலுண்டு. ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். ஆண்டவரே அவர்களது நம்பிக்கை (எரே. 17:7) என்று வேதம் கூறுகிறது. நேர்மையற்ற வழியில் செல்வம் சேர்ப்போர், தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும் கௌதாரி போன்றோர். தம் வாழ்நாட்களின் நடுவிலே அவர்கள் அச்செல்வத்தை இழந்து விடுவர். இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர் (எரே.17:11). எனவே நேர்மையை மதிக்கும் தன்மானமுள்ள இளைஞன் ஒருவன் உங்கள் மருமகனாக வருவான். கவலைப்படாதிருங்கள். “உங்கள் கவலைகளை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள்மேல் கவலை கொண்டுள்ளார்” (1பேது. 5:7) என்று பேதுரு என்னும் திருத்தூதர் கூறுகிறார். ஆதாம் தனிமையாக இருந்தபோது ஆதாமுக்கு ஏற்ற துணையை உருவாக்குவேன் என்று படைத்தவர் கூறினார். அதுபோல, உங்கள் மகளுக்கும் ஏற்ற துணையை கடவுள் உருவாக்குவார். உடனே உங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் ஒரு பொறுப்புள்ள போதகரை அணுகி உங்கள் காரியங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். எதை குறித்தும் கவலைப்படாதீர்கள்.
நாங்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற தொடங்கியபின் எங்களில் யாராவது இறந்தால் புதைக்க இடம் தருவீர்களா ?